செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

தேவதைகளின் காதலன் (பகுதி 2)

உணர்வுகளில் ஒளியேற்றுவது மட்டுமல்ல; உண்மைமைகளை நுட்பமாக உரைப்பதும் கவிதையின் அவசியமாகிறது.தேவதைகளும் சாத்தான்களும் நிறைந்தது உலகு. தேவதைகளின் உருவில் சாத்தான்கள் உலவுவது இயல்பே. இங்கு பொய்கள், உண்மைகளின் உருவத்தோடு உலா வரும். புகழுரைகளைத்  தன்னருகில் நெருங்கவிடாது, நிறுத்துப் பார்க்கும் மனம் அவசியம். புன்சிரிப்புகளில் கூட போலிகள் உண்டா? இதோ கவிஞர் தங்கம் மூர்த்தியின் கவிதை பாருங்கள்.

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

தேவதைகளின் காதலன் (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வைதேவதைகளின் காதலன்

 (கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் 'தேவதைகளால் தேடப்படுபவன்' நூல் குறித்த என் பார்வை)

கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் ஒன்பதாவது நூல் 'தேவதைகளால் தேடப்படுபவன்'. செய்நேர்த்தி மிக்க நகைத்தொழிலாளி நுட்பத்தோடும் அழகோடும் ஆபரணம் செய்வதைப்போல், கவிதைகளை இயற்றியுள்ளார்.

சனி, 14 ஜனவரி, 2017

அது எந்தத் தை..?!

அது எந்தத் தை..?!     “கடல் மிசை உதித்த பரிதியின் செங்கதிர்  
     வானெல்லாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள்!
     புவியின் சித்திரம் ஒளியில் பொலிந்தது!
     இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்”
வானச் சூரியன் வனப்பை, அதனால் ஒளி பெரும் உலகை பாவேந்தர் வார்த்தைத் தூரிகை கொண்டு வரைகிறார்.  

                இயற்கையோடு இயைந்து வாழ்ந்த இனம் நம் தமிழினம். இயற்கையை, உழைப்பை, உழவைத் தமிழனைப்போல் நேசித்தவர் உலகில் எவருமிலர். உழைப்பின் உயர்வை, நிலத்தின் மாண்பை, நன்றியுணர்வின் நாகரிகத்தை மன்பதைக்குக் காட்டும் விழா பொங்கல் விழா! மார்கழிப் பனிக்காலம் நிறைவுற்று, நம் வாழ்வில் ஒளியேற்றுகின்ற ‘தை மகள்’ பிறக்கிறாள்.

வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

கவிராசன் பாரதிக்கு ஒரு கவியஞ்சலி

        புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் நடத்திய கவி

யரங்கில் என் கவிதை இதோ.

                ரௌத்திரம் பழகு!!!!!
நகரத்தார் அரங்கினில்
அகரத்தை நம் அன்னை மொழி அதனைச்

சிகரத்தில் ஏற்றி வைத்த செந்தமிழன் பாரதிக்கு
என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

கவிராசன் கழகமதில்
கவியரங்கம்  கேட்க
செவியோடு வந்திருக்கும்
செந்தமிழ்ப் பாவலர்காள்
அனைவருக்கும் என் வணக்கம்!!


துருப்பிடித்த உவமைகளால் மங்கிப்போன
   தூர்ந்துவிட்ட கற்பனையால் துவண்டு போன
இருளடைந்த இலக்கியத்தைச் சாணை தீட்டி
   இருந்தமிழைச் சீர்செய்தான் இனிமை கூட்டி
நெருப்பினிலே சொல்லேடுத்தான் தமிழும் ஆள!
   நேர்மை எனும் வில்லேடுத்தான் பகைமை மாள
அரும்பல்ல அவன்கவிதை வலிமை கூட்டி
   ஆதிக்கத்தின் அடிவேரில் பாயும் ஈட்டி !

செவ்வாய், 11 அக்டோபர், 2016

தயவுசெய்து கல்லெறியுங்கள்..!


தயவுசெய்து கல்லெறியுங்கள்..!

இனி வீணைகள்
விரல்கள் பார்த்தே
இசையை எழுப்பும்.....!
ஞானசம்பந்தர்களுக்கு ஞானப் பாலும்,
மற்றவர்க்கு கள்ளிப்பாலும்
கல்விப்பாலாய் வழங்கப்படும்.
வெள்ளைத் தாமரை
காவியாகும்.....

திங்கள், 19 செப்டம்பர், 2016

வழக்குரை காதை(பகுதி .5 ).தீர்ப்பு -உயிர் தந்து நீதி காத்தவன்

வழக்குரை காதை.( பகுதி .5) உயிர் தந்து நீதி காத்தவன் 

தீர்ப்பு ..யானோ அரசன்..?

                  மாணிக்கப் பரல்கள் தன் வாயருகில் தெறித்தவுடன் உண்மையை உணர்ந்தான் பாண்டிய நெடுஞ்செழியன். தவறிழைத்த தமக்கு, இந்நாட்டை ஆளும் தகுதி இல்லையென்பதை மனதளவில் உணர்ந்தான்.

                 யாம்..யாம் ..என அரசர்களுக்கே உரிய மரியாதைப் பன்மையுடன் பேசியவன், "யானோ அரசன்? யானே கள்வன்".. என யான்..என் என தன்னிலையினும் தாழ்ந்தான்

வியாழன், 15 செப்டம்பர், 2016

வழக்குரை காதை.(பகுதி .4) உடையும் சிலம்பும் வெளிவரும் உண்மைகளும்

வழக்குரை காதை.(பகுதி .4)  உடையும் சிலம்பும் வெளிவரும் உண்மைகளும்  

கண்ணகி உரைக்கும் முன் தீர்ப்புகள்

'தேரா மன்னா'..எனத் தொடங்கி ,மன்னனிடம் வாதாடும் கண்ணகி இரண்டுவழக்கின் தீர்ப்புகளை முன்வைக்கிறாள். இன்றைக்கும் நீதிமன்றில் வாதாடுவோர், முன் வழங்கப்பட்ட நீதிமன்றத்  தீர்ப்புகளைத் தன் வழக்கிற்கு வலு சேர்க்கச் சொல்லும் நடைமுறை அன்றைக்கும் இருந்தது வியப்புக்குரியது.                   

தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவின் துயர்போக்கத் தன் தசையை அரிந்து கொடுத்தான்  சிபிச் சக்கரவர்த்தி. 

கன்றையிழந்த தாய்ப்பசுவின் துயர்போக்கத் தன் அருமைப்புதல்வனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றான் மனுநீதிச்சோழன்.

                  சிபிச் சோழன் குறித்து சங்க இலக்கியத்தில் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. மனுநீதிச் சோழன் பற்றிய குறிப்பைச், சங்க இலக்கியமான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான 'பழமொழி நானூறு' காட்டுகிறது.

"சால மறைத் தோம்பிச் சான்றவர் கை கரப்பக் 

 காலை கழிந்ததன் பின்றையும் மேலைக் 

 கறவைக்கன்று ஊர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் 

 முறைமைக்கு மூப்பிளமை இல்"

பெரியபுராணம் காட்டும் மனுநீதிச் சோழன் 

           திருவாதவூரில் மனுநீதிச் சோழன் தவமிருந்து பெற்ற பிள்ளை 'வீதிவிடங்கன்'. அவன் சிவாலயம் செல்லத் தேரேறிச் சென்றபோது, ஒரு பசுங்கன்று தேர்ச்சக்கரத்தில் சிக்கி இறந்தது. கன்று இறந்தது கண்டு மனம் பொறாத தாய்ப்பசு, அரண்மனை வாயிலில் இருந்த ஆராய்ச்சி மணியை அடித்தது. என்ன நடந்தது என வினவிய மன்னனுக்கு அமைச்சர் சொன்ன பதிலில், இன்று குற்றவாளியைக் காப்பாற்ற, வல்லாண்மை மிக்க ஒரு சாதுர்யமான வழக்குரைஞரின் வாதத் திறன் வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

" வளவநின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல் ஏறி 

 அளவில்தேர்த் தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால் 

 இளையஆன் கன்று தேர்க்கால் இடைபுகுந் திறந்த தாகத் 

 தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை என்றான்" 

              இன்றைக்கு சைரன் பொருத்தப்பட்ட வண்டிபோல் அன்று 'மணி'ஒலிக்கும் 'நெடுந்தேர்,

              இன்று ராணுவ வாகனங்கள் மட்டுமே செல்லும் வழிபோல் (prohibitted area) அன்று 'அரசு உலாந்தெரு'    

             இன்றும் வாகன சட்டப்படி, பின்னுள்ள சக்கரங்களில்  விபத்து ஏற்பட்டு இறந்தால்..அது ஓட்டுநரின் குற்றமல்ல. அன்று, கன்று 'தேர்க்கால் இடைபுகுந்து இறந்தது'.

     அதனால் இளவரசன் மேல் குற்றமில்லை.அமைச்சரின் விளக்கத்தால் அமைதியடையாத அரசன், கலாவல்லபர் என்ற மந்திரியை அழைத்து, மகனைத் தேரேற்றிக் கொன்று வருக என ஆணையிடுகிறான். மந்திரியோ கன்று இறந்த இடத்தில் தான் இறக்க, மனம் பொறாத மனுநீதிச்சோழன், தானே தேரேறிச் சென்று தன் ஆருயிர் புதல்வனைக் கொல்கிறான்.

(இராமலிங்க அடிகளார்  தன் 'மனுமுறை கண்ட வாசகம்'என்ற நூலிலும் மனுநீதிச் சோழன் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்.)

உடை..உடை...உடையும் சிலம்பு 

        இதோ நீதி மன்றத்தில் சினத்தோடு நிற்கிறாள் கண்ணகி. "கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று "என்கிறான் மன்னன்

               ."என் கால் சிலம்பு மணி உடை அரியே" என்கிறாள் கண்ணகி. "யாம் உடைச் சிலம்பு முத்து உடை அரியே" என்கிறான் மன்னன். சிலம்பு உடையப் போகிறது என்பதை நமக்கு முன்பே உடை..உடை...உடை என வார்த்தைகளால் காட்டுகிறார் இளங்கோ.

        இதோ கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பு முன்வைக்கப்படுகிறது. அந்தச் சிலம்பைக் கண்டதும் கண்ணகியின் சீற்றம் அதிகமாகிறது. எடுக்கிறாள்; உடைக்கிறாள்; கண்ணகியின் காற்சிலம்பில் இருந்த மாணிக்கப்பரல்கள், வாய்மை தவறிய மன்னவனின் முகத்தில் தெறிக்கிறது.

நீதிமன்றம் நாளை கூடும்..... 

       

 

 

 

 

Related Posts Plugin for WordPress, Blogger...